வழிக்காட்டியைத் தவிர்

அன்புகொண்ட அவளிடம்
நான் கொள்ளும் சிறு ஊடல்களில்
அவள் எனக்கு தரும்
தண்டனை அவளது மௌனம்,
எப்படி சொல்வேனடி
மரணத்தைவிட கொடியது
மௌனமென்று..

கடலலையில் கால்வைக்க மனமில்லாமல்
கடற்கரை மணலில் அமர்ந்தேன்,
உன் முகம்போன்ற வட்டநிலவின்
பிம்பம் கடல்நீரில் விழிந்ததால்.

காக்கை குருவிகளின் ரெக்கைகள் விரிந்தது
கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகள்
நனையாமல் பாதுகாக்க!

ஓடிவரும் வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு
விளையாடத் துடித்தது சிறுவனின் உள்ளம்,
அதனை அணைப்போட்டுத் தடுத்தது
சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் திட்டுக்குரல்..

செல்லும் திசைதெரியாமல் தவித்தது
தன் கூட்டத்தை விட்டு
நீரில் அடித்துவந்த ஆட்டுக்குட்டி ஒன்று.

கண்களில் சோகத்துடன் சிலையாய் நின்றான்
தன் பயிர்கள் நீரில் மூழ்கியதைக் கண்ட
ஏழை விவசாயி ஒருவன்,

மின்சாரம் தடைப்பட்டு இருள்சூழ்ந்த தெருவில்
வெண்ணிலவின் ஒளியில் அங்குமிங்கும்
வீடுகளை இழந்த மக்கள் கூட்டம்,

இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும்
மழையை ரசித்தேன்,
கண்கள் நான்கும் மௌனமொழி பேசிக்கொண்டு
அவளின் விரல்பிடித்து நடந்ததால்!!

பறவைகளில் இல்லை
வாழ்ந்த கூட்டைக் கலைத்து
வெளியேறிச் செல்வது,
காதலில் அது இயல்பு
வாழ்ந்த இதயத்தை புண்ணாக்கிச் செல்வது..

காதலுக்கு கண்களில்லை
என்கின்றனர் சிலர்,
இன்று காதலர்கள் பலர்
பேசுவதே கண்களால் தானே.

பெண் பார்க்க வந்தவர்களுக்கு
அவள் கொடுத்த காபியில் உப்பு
காதல் தோல்வியின் காரணமாக அவள்
சிந்திய கண்ணீர் அதில் கலந்ததால்.

என் இதயம் வலித்தபோதும்
நான் கண்கள் கலங்கியதில்லை
எங்கே நான் கண்கலங்கினால்
என் கண்ணில் இருக்கும் நீ
கண்ணீரில் உதிர்ந்து விடுவாயோ
என்ற அச்சம் தான்

கருவில் உன்னை சுமந்தவளும்
தோளில் உன்னை சுமந்தவனும்
பல கற்பனைக் கோட்டை கட்ட
நீ உனக்கென
ஒரு தனிக்காதல் கோட்டை கட்டுகிறாயே
இதில் என்ன நியாயம்?

வெகு தொலைவில் இருந்தாலும்
கேட்கிறது உன் அழைப்புக் குறல்
என்று வந்து எனைச் சந்திப்பாயென
நீ கேட்பது?
காத்திருக்கிறேன் கருமேகமாய்
நேரம் வரும்போது மழையாய்
பொழிந்து பள்ளத்தை நோக்கி
பாயும் வெள்ளமாக உன்னுடன்
சங்கமிக்க…

காத்திருந்தேன் உனக்காக ஒருநாள்
கடற்கரை மணலில் அன்றுஅது
அமாவாசை இரவு என்றெண்ணி
உன் வருகைக்கு பிறகுதான் உணர்ந்தேன்
அந்த வெண்ணிலவும் உன் அழகினில்
வெட்கி தன்னை மேகத்துள் மறைப்பதை

Follow

Get every new post delivered to your Inbox.